மருதுபாண்டியர்களின் 225-வது நினைவு நாளான நாளை (அக்டோபர் 24), திருப்புத்தூரில் அரசு விழா நடக்கிறது. இதில் அமைச்சர்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
பாதுகாப்புக்காக மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா தலைமையில் 1,400-க்கும் அதிகமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் அக்டோபர் 21 முதல் 31 வரை 163 (முன்பு 144) தடை உத்தரவு அமலில் உள்ளது.
நிகழ்ச்சிகள் இரு இடங்களில் நடைபெறும்: சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் அரசு நினைவு மண்டபம், பேருந்து நிலையம் எதிரே அவர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள நினைவுத்தூண். இவ்விரு இடங்களிலும் வண்ணம் பூசுதல், தூய்மைப்படுத்துதல், சுகாதார வசதி, கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள்ளிட்ட பணிகளும், பொதுப் போக்குவரத்துக்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
வரலாற்றுப் பின்னணி: ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் அறிவித்துப் போராடிய மருதுபாண்டியர்கள் 1801 அக்டோபர் 24-ல் திருப்புத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடன் 500-க்கும் மேற்பட்டோரும் தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.



















