சேலம் அருகே சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற டாரஸ் லாரியின் பின்புறம் கார் மோதியதில், காரில் பயணம் செய்த 3 இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொருவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
சேலம்-கோவை நெடுஞ்சாலையில் அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரேயுள்ள பாலத்தில், நேற்று இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. கார் அதிவேகத்தில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் மீது திடீரெனப் பின்னாலிருந்து மோதியது.
எடப்பாடி தாலுகா பூலாம்பட்டி காட்டூரைச் சேர்ந்த முருகன் (41) என்பவரின் காரை, சேலம் திருவாக்கவுண்டனூரைச் சேர்ந்த அரவிந்த் (30) ஓட்டிச் சென்றார். அம்மாபேட்டையில் இருந்து முருகனை பூலாம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் விடுவதற்காகச் சென்றபோது விபத்து நேர்ந்தது. காரில் சேலம் ஜங்ஷனைச் சேர்ந்த கார்த்தி (35), சேலம் டவுனைச் சேர்ந்த விக்ரம் (29) ஆகியோரும் இருந்தனர்.
நால்வரும் படுகாயமடைந்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விக்ரம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து முருகன், கார்த்தி ஆகிய இருவரும் காலையில் அடுத்தடுத்து இறந்தனர். அரவிந்துக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


















