சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து தப்பிய இரு கைதிகளில் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பணியில் அலட்சியமாக இருந்ததாக 6 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, சுரேஷ் (41), சுதீப் போகதி (21) ஆகிய இரு கைதிகள் அடுத்தடுத்து புழல் சிறையிலிருந்து தப்பினர். மிக அதிகப் பாதுகாப்பு கொண்ட சிறை எனக் கருதப்படும் புழலில் இப்படி நடந்தது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. சிறைத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.
திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த சுதீப் போகதி இன்று கைது செய்யப்பட்டு, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த சுரேஷ் இன்னும் பிடிபடவில்லை; அவரைப் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக டிஜிபி சந்தீப் ராய் நடவடிக்கை எடுத்துள்ளார். பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி 6 சிறைக் காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். தப்பிச் செல்ல வழிவகுத்த பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.




















