விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற 4 பெண்கள் உள்பட 252 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சமயபுரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் 5ஆவது நாளில் அமைச்சர்கள் ரமேஷ், வினோத், காந்திராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இடைத்தேர்தல் நடைபெறுவதால் முடிவெடுக்க 20 நாட்கள் அவகாசம் வேண்டும் என அவர்கள் கேட்டதை ஏற்று, விவசாயிகள் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
ஆனால், அந்தக் காலக்கெடு முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் பயிர்க் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை எனக் கூறி, இன்று முதல் சமயபுரம் சக்தி நகர் பனைத்தோப்பில் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் அறிவித்தனர்.
இதையடுத்து சமயபுரம் சுங்கச்சாவடி, நால்ரோடு, நம்பர் ஒன் டோல்கேட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு வாகனச் சோதனை நடத்தப்பட்டது. இருங்களூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே விவசாயிகள் திரளத் தொடங்கியபோது, போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்தனர். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது; விவசாயிகளைத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றிக் கைது செய்தனர்.
இதற்கிடையே, ஒரு விவசாயி தனது பச்சைத் துண்டால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றதாகவும், மற்றொருவர் கைதாக விரும்பாமல் போலீசாரின் கால்களைப் பிடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. கைதான அனைவரும் சமயபுரத்தில் 3 இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டனர்.




















