கோவையில் கே.கே. நாயுடு பள்ளி மாணவர் ஒருவர் சாதி ரீதியாகக் கேலி செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படும் வரை மகனின் உடலைப் பெற மாட்டேன் என அவரது தந்தை உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் அகிலனின் தந்தை அசோக்குமார் கூறியதாவது: மகனுக்குக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்தபோது, வகுப்பாசிரியர் விஜயகுமார் மாணவர்களிடம் சாதி விவரங்களைக் கேட்டுள்ளார். மகன் உள்பட இருவர் எழுந்து தங்கள் சமூகத்தைத் தெரிவித்தனர். அப்போது ஆசிரியர் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்களா எனக் கேட்டதாகவும், மகன் தெரியாமல் ஆம் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார். அதன்பின் சக மாணவர்கள் சாதிப் பெயரைச் சொல்லி கேலி செய்து, தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதனால் மகன் மனதளவில் பாதிக்கப்பட்டு, வேறு பள்ளிக்கு மாற்றுமாறு கேட்டதாகவும், இதுபற்றி தலைமை ஆசிரியர் அருண்குமார், வகுப்பாசிரியர் விஜயகுமார் ஆகியோரிடம் புகார் அளித்தபோது சரிசெய்வதாகக் கூறினர் என்றும் தந்தை கூறினார். 10 நாட்கள் விடுமுறைக்குப் பின் பள்ளிக்குச் சென்ற மகன், சம்பவத்தன்று மாலை வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் ஆசிரியர் விஜயகுமாரைக் கைது செய்த போலீசார், பீளமேடு காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் அருண்குமாரையும் கைது செய்ய வலியுறுத்தி, மாணவரின் உறவினர்கள் பீளமேடு காவல் நிலையம் முன் அவினாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
துணை ஆணையர் தங்கதுரையைச் சந்தித்த தந்தையிடம், விசாரணை முடிந்த பின்னரே கைது குறித்து முடிவெடுக்க முடியும் எனக் காவல்துறை கூறியதாகத் தெரிகிறது. ஆனால் கைது செய்த பிறகே உடலைப் பெறுவேன் என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக உள்ளார். உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கை.




















