நடிகர் டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூடு வழக்கில், இரண்டு பெண்கள் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 18 அன்று மும்பை ஜுஹு பகுதியில் அவரது கார் மீது இருவர் ஏழு முறை சுட்டனர்; மூன்றாவது நபர் சற்றுத் தொலைவில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்தார். மூவரும் அந்த வாகனத்தில் தப்பிச் சென்று, அந்தேரி மேற்கு ரயில் நிலையம் அருகே அதை விட்டுச் சென்றனர். சிசிடிவி காட்சிகள், தொழில்நுட்ப விசாரணை மூலம் அவர்கள் ஜெய்ப்பூர் ரயிலில் சென்றது கண்டறியப்பட்டு, ராஜஸ்தானின் கோட்டாவில் பிடிபட்டனர். பிஹாரைச் சேர்ந்த ஹிருத்திக் என்ற ரோஷன் (22), ஹரியானாவைச் சேர்ந்த ரேஹான் (18), பூல் சிங் (18) ஆகியோர் அவர்கள். நேபாளத்துக்குத் தப்பிச்செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
தற்போது டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்த குணால் (21), சுமித் (19), ராதா (23), பபிதா (23) ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் மகாராஷ்டிரா சிஐடி குழுவிடம் இடைக்காவலில் ஒப்படைக்கப்பட்டனர். குணால், சுமித் இருவரும் ஆயுதங்களைச் சேகரிக்க இரு வாரங்களுக்கு முன் அமிர்தசரஸ் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறையிலுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த அனில் பண்டிட் இந்தச் சதிக்குப் பின்னால் இருந்ததாகவும், அவர் மூலம் தாக்குதலுக்குப் பிஷ்னோய் பொறுப்பேற்றதாகவும் கூறப்படுகிறது.


















