தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ராணிப்பேட்டை, ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர், திருவள்ளூர், சேலம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை எச்சரிக்கைகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மலைப்பகுதிகள், கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகக் காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 33 மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:
இடி, மின்னல் நேரத்தில் திறந்தவெளியிலும் மரங்களின் அடியிலும் நிற்கக் கூடாது. உறுதியான கான்கிரீட் கட்டிடங்களுக்குள் தஞ்சம் புக வேண்டும். தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்; தேவைப்பட்டால் மின் இணைப்பைத் துண்டிக்கலாம்.












