பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகக் குற்றம் சாட்டி, தமிழக வெற்றிக் கழக அரசை திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். காவல் துறையை செயல்படத் தெரிந்த ஒருவரிடம் முதல்வர் விஜய் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமது எக்ஸ் தள பதிவில், புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் வீட்டில் கோபித்துக்கொண்டு வேளாங்கண்ணிக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மற்றொரு பதிவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் நடந்த சம்பவங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கிக் கொல்லப்பட்டது, திரேஸ்புரத்தில் மீனவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டது, திருவைகுண்டம் கள்ளபிரான் கோயில் அருகே காவலாளி அரிவாளால் வெட்டப்பட்டது ஆகியவற்றை சுட்டிக்காட்டி, மாவட்டமே கொலைக்களமாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டதையும், அவரது இரண்டு பெண் குழந்தைகள் கடத்தப்பட்டதையும், கணவரும் மகனும் படுகாயம் அடைந்ததையும் குறிப்பிட்ட கனிமொழி, வீட்டிலும் பொது இடங்களிலும் பாதுகாப்பு இல்லாத சூழலுக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். குற்றங்களைத் தடுக்காமல் அரசின் அதிரடிப்படை என்ன செய்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


















