காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் புதிய நடைமுறையை எதிர்த்து டாஸ்மாக் கடைகளை மூடிப் போராடியதற்காக 245 கடை மேற்பார்வையாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. 1,729 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின்படி, காலி பாட்டிலுக்கான ரூ.10, மதுபானத்தின் அதிகபட்ச சில்லறை விலையிலேயே சேர்க்கப்பட்டு நவம்பர் 1 முதல் அமலானது. உதாரணமாக ரூ.140 பாட்டிலின் புதிய விலை ரூ.150. காலி பாட்டிலைத் திருப்பித் தருவோருக்கு ரூ.10 திரும்பக் கிடைக்கும். இத்திட்டம் இதுவரை இல்லாத சென்னை உள்ளிட்ட 8 டாஸ்மாக் மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
பாட்டில்களை வைக்க இடமில்லை, சரிபார்க்க ஸ்கேனர் இல்லை, பணிச்சுமை கூடும் என்பது ஊழியர்களின் தரப்பு. இதனால் நவம்பர் 1-ல் தமிழ்நாடு முழுவதும் 460 கடைகள் மூடப்பட்டதால், திறந்திருந்த கடைகளில் கூட்டம் அலைமோதி போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டியதாயிற்று. போராட்டம் தொடர்ந்தாலும் கடைகளைத் திறக்க வேண்டும், தேவைப்பட்டால் தற்காலிகப் பணியாளர்களைப் பயன்படுத்தலாம் என மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நிர்வாகம் வெளியிட்ட பட்டியலின்படி, நவம்பர் 1-ல் 931 பேருக்கும், நவம்பர் 2-ல் 798 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நவம்பர் 1-ல் 4 பேரும், நவம்பர் 2-ல் 241 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 169 பேரும் (சென்னை மத்தியில் 50, சென்னை வடக்கில் 58, திருவள்ளூர் கிழக்கில் 61), சேலம் மண்டலத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 75 பேரும், மதுரை வடக்கில் ஒருவரும் நீக்கப்பட்டனர். கோவை, திருச்சி மண்டலங்களில் யாரும் நீக்கப்படவில்லை.












