சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேளச்சேரி ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் இன்று காலை தொடங்கியுள்ளன. மழைக்கு முன்பே முடிக்கப்பட வேண்டிய இந்தப் பணிகள் தாமதமாகத் தொடங்கப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
வெள்ள நீர் ஏரிக்குள் வருவதை ஆகாயத்தாமரை தடுப்பதால் அதை அகற்றுவது அவசியம் எனக் கூறப்படுகிறது. அதேபோல, அடையாற்றில் மண்டிக் கிடக்கும் கருவேல மரங்களை அகற்றும் பணியும் தொடங்கியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அடையாறு, கொசஸ்தலை, கூவம் ஆகிய ஆறுகளைப் பருவமழைக்கு முன் தூர்வாரியிருக்க வேண்டும் என்றும், அது செய்யப்படாததால் மிதமான மழைக்கே நீர் வடிய நீண்ட நேரமாகிறது என்றும் குற்றச்சாட்டு உள்ளது. சூழலியலாளர்களும் எதிர்க்கட்சியினரும் விமர்சித்த பிறகே அரசு பணிகளைத் தொடங்கியதாக ஒன்இந்தியா செய்தி தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ நிலவுவதால் பருவமழை எதிர்பார்ப்பைவிட அதிகமாக இருக்கலாம் என்றும், வடிகால் பணிகள் முழு வேகத்தில் நடந்தால்தான் வெள்ள பாதிப்பைக் குறைக்க முடியும் என்றும் குறிப்பிடப்படுகிறது. பணிகள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்று சென்னை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

















