கோவை பீளமேட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்த மாணவர் அகிலன் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், வகுப்பாசிரியர் விஜயகுமாரை பீளமேடு போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அகிலன், நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பிற்பகலில் வீடு திரும்பிய தாயார் கௌசல்யா மகன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், அகிலனுடன் படித்த இரு மாணவர்கள், வகுப்பாசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் அருண் குமார் ஆகிய நால்வரே மகனின் மரணத்துக்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பேரில், தற்கொலைக்குத் தூண்டுதல், தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துதல், தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளில் நால்வர் மீதும் வழக்குப் பதியப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையின்படி, வகுப்பறையில் மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து ஆசிரியர் விஜயகுமார் கேள்வி எழுப்பினார். அதன் பிறகு, சக மாணவர்கள் இருவர் அகிலனைச் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டித் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.




















