மெரினா கடற்கரைச் சாலையின் நெரிசலைக் குறைக்க, கலங்கரை விளக்கத்திலிருந்து அடையாறு திரு.வி.க. பாலம் வரை 4 கிலோமீட்டருக்கு உயர்மட்டச் சாலை அமைக்கும் யோசனை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. இதன் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பவரைத் தேர்வு செய்ய, நெடுஞ்சாலைத் துறையின் சென்னை நகர சாலைகள் கோட்டம் டெண்டர் அறிவித்துள்ளது.
அறிக்கை தயாரிப்புப் பணிக்கான மதிப்பீட்டுத் தொகை ரூ.38.10 லட்சம். பணியை முடிக்க 60 நாள்கள் வழங்கப்பட்டுள்ளன.
தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் இதில் பங்கேற்கலாம். அவர்கள் ரூ.29,500 முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும்; டெண்டர் படிவத்துக்குக் கட்டணம் கிடையாது.
இந்தச் சாலை செயல்பாட்டுக்கு வந்தால், மெரினா சாலையில் தினமும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குப் பெருமளவு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு திட்ட அறிக்கை தயாரிப்பு என்ற ஆரம்பக் கட்டமே நடந்து வருகிறது.




















