சென்னை கலங்கரை விளக்கம் முதல் திருவிக பாலம் வரை 4 கிலோமீட்டர் நீளத்துக்கு உயர்மட்டச் சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க நெடுஞ்சாலைத் துறை டெண்டர் கோரியுள்ளது.
போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் பறக்கும் சாலை அமைப்பதற்கான அறிக்கையைத் தயாரிக்க, தகுதியான ஆலோசகர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆவணத்தை நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.
திட்ட அறிக்கையில் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் சாத்தியக்கூறு ஆய்வு, போக்குவரத்து ஆய்வு, மண் பரிசோதனை, மழைநீர் வடிகால், சந்திப்புகளின் மேம்பாடு, சர்வீஸ் சாலைகளின் வடிவமைப்பு, செலவு மதிப்பீடு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் ஆகியவை இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெண்டர் பணிக்கு 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான ஒப்பந்ததாரர்கள் முன்வைப்புத் தொகையாக ரூ.29,500 செலுத்த வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த உயர்மட்டச் சாலை அமைக்கப்பட்டால், மெரினா கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது திட்டம் அறிக்கை தயாரிக்கும் நிலையிலேயே உள்ளது என்பதால், சாலை அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் இல்லை.




















