டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிய காஷ்மீரைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிரான தனது முதல் வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தனர். இதன் விளைவாக அவர்கள் படித்து வந்த அக்ரா பொறியியல் கல்லூரி நிர்வாக அவர்களை இடை நீக்கம் செய்திருந்தது. இந்நிலையில், அம்மாணவர்கள் மூன்று பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் வெற்றியை மையப்படுத்தி மத அடிப்படையில் பிரிவினைவாதத்தை தூண்டியது, இணைய பயங்கரவாதம் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் அம்மூன்று மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச காவல்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள அர்ஷித் யூசுப், அல்தாஃப் ஷேக், செளகத் அகமது கானாய் ஆகியோர் ராஜா பல்வந்த் சிங் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருப்பது ஒழுங்குமுறையற்ற செயல் என கல்லூரி விடுதி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதே காரணத்துக்காக ராஜஸ்தானைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவரும் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். பாஜக அரசின் இந்துத்துவ போக்கின் வெளிப்பாடகவே இச்செயல்கள் பார்க்கப்படுகின்றன.
இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து இந்திய கிரிகெட் வீரர் முகமது ஷமி இணையத்தில் கடும் தாக்குதலை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
























