பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகனும் நடிகருமான ஜூனியர் பாலையா நேற்று (நவம்பர் 2) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இயற்பெயர் ரகு பாலையா. திரையுலகில் நுழைந்த பின் ஜூனியர் பாலையா என்ற பெயரில் அறியப்பட்டார். 1975-ல் வெளியான 'மேல்நாட்டு மருமகள்' படம் மூலம் அறிமுகமான அவர், 'கோபுர வாசலிலே', 'கரகாட்டக்காரன்', 'சின்னத்தாயி', 'சங்கமம்', 'வின்னர்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார்.
2007-க்குப் பிறகு அவர் பெரிதாக நடிக்கவில்லை. 2012-ல் சமுத்திரக்கனி நடித்த 'சாட்டை' மூலம் மீண்டும் வந்து, 'கும்கி', 'தனி ஒருவன்', 'புலி', 'நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களில் தோன்றினார். 2021-ல் வெளியான 'என்னங்க சார் உங்க சட்டம்' அவரது கடைசிப் படம். அவரது மறைவுக்குத் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.














