ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகேயுள்ள ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியான தகவல் மேற்காசியாவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்கச் செய்தி நிறுவனம் ஒன்று இதைத் தெரிவித்துள்ளது.
தாக்குதல் சிறிய அளவிலானது என்றும், பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது என்றும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். தரையிலிருந்து வானில் தாக்கும் ஈரானின் ஏவுகணைகள் இலக்கு வைக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஈரான் அரசு தொலைக்காட்சியும் தாக்குதல் குறித்துச் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் நாளில் இது நிகழ்ந்துள்ளது. தேர்தலின்போது ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என அதிபர் டிரம்ப் முன்பு தெரிவித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி 28-ல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தின; அதன் பின் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஹார்முஸ் வழியான சரக்குக் கப்பல் போக்குவரத்து முடங்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்தது. தற்போது போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.












