சீனாவின் முன்னாள் தலைவர் மாவோவை "சர்வாதிகாரி" எனக் குறிப்பிட்டதால் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பே சீன மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
பிரான்ஸ் அணியின் கேப்டனும் ரியல் மாட்ரிட் வீரருமான எம்பாப்பே சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பங்கேற்றார். தம்மைப் பற்றிய மீம்களில் பிடித்தது எது என்று கேட்கப்பட்டபோது, ரசிகர்கள் அவரை "சர்வாதிகாரி" என அழைப்பதைக் குறிப்பிட்டு, மாவோவுடன் இணைத்து வெளியான மீம் ஒன்றைப் பற்றிப் பேசினார். அதில் இருப்பவர் சீன சர்வாதிகாரியாக இருக்கலாம் என்றும் கூறினார்.
இதற்குச் சீனாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எம்பாப்பே ஜெர்சிகள் காட்சியிலிருந்து நீக்கப்பட்டன; அவர் விளையாடும் போட்டிகள் மற்றும் ஸ்பெயினின் லா லிகா ஆட்டங்களை சீனத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதை நிறுத்தின. மூன்று சீன நிறுவனங்கள் அவருடனான வணிக ஒப்பந்தங்களை நிறுத்துவதாக அறிவித்தன.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எம்பாப்பே, பாட்காஸ்டில் தாம் கூறியது தவறு என்பதை உணர்ந்ததாகவும், அது சீனாவிலும் உலகெங்கும் உள்ள சீன மக்களின் மனதைப் புண்படுத்தியதாகவும் தெரிவித்தார். சீன மக்களையும் அவர்களின் வரலாற்றையும் ஆழமாக மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சர்ச்சை சர்வதேச அளவில் பேசுபொருளாகி, எம்பாப்பே மற்றும் அவரது அணிக்குப் பொருளாதார ரீதியாகவும் பின்னடைவை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
















