உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் விலையில் பெரிய மாற்றம் வந்துள்ளது. 543 மருந்துகளுக்குப் புதிய அதிகபட்ச சில்லறை விலைகளைத் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. சிலவற்றின் விலை 93 சதவீதம் வரை சரிந்துள்ளது.
பின்னணி என்னவென்றால், சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.2,700-க்கு விற்கப்படும் ஒரு மருந்து நோயாளிகளுக்குப் பத்து மடங்கு விலையில் கொடுக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிபதிகள் இதைக் கடுமையாகக் கண்டித்தனர். அதன் பின் மத்திய அரசு, இத்தகைய மருந்துகளில் வர்த்தகர்கள் பெறும் லாபத்தை 30 சதவீதத்துக்குள் வைக்க முடிவு செய்தது.
விலை குறைந்த மருந்துகளில் சில: மார்பகப் புற்றுநோய்க்கான பால்போசிக்லிப் ரூ.40,421-ல் இருந்து ரூ.2,720 ஆனது; கீமோதெரபியில் பயன்படும் தியோடெபா குப்பி ஒன்று ரூ.80,072-ல் இருந்து ரூ.7,150 ஆனது. டசாடினிப், லென்வாடினிப், அபிராடெரோன், ஓலபாரிப் மருந்துகளுக்கும் குறிப்பிடத்தக்க விலைக்குறைப்பு உண்டு.
எல்லா மருந்துகளுக்கும் இது பொருந்தவில்லை. 21-க்கு மேற்பட்ட வகை புற்றுநோய்களுக்குப் பரிந்துரைக்கப்படும் கீட்ரூடா ரூ.2,16,500-லேயே உள்ளது. ரிபோசிக்லிப் (கிரிக்ஸானா) ரூ.24,435 என்ற விலையிலேயே தொடர்கிறது.
இந்த விலைக்குறைப்பு புற்றுநோய் சிகிச்சைச் செலவால் சிரமப்படும் நோயாளிகளுக்கு ஓரளவு நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், விலை மாறாத மருந்துகளையும் பயன்படுத்தும் நோயாளிகளுக்கு இந்த மாற்றத்தால் உடனடிப் பலன் இருக்காது.
















