மைசூரு தசரா விழாவின்போது, முதல்வர் டி.கே.சிவகுமாருடன் பூஜைக்குச் சென்ற பட்டியலின அமைச்சர்கள் மூவரை போலீஸ் உயரதிகாரி தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தசரா விழாவின் இறுதி நாளான புதன்கிழமை, அரண்மனை வளாகத்தில் நந்தி கொடிக்கு முதல்வர் சிவகுமார் சிறப்பு பூஜை செய்தார். அவருடன் கன்னட கலை, கலாசாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி சென்றபோது அவரை மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷ்யாந்த் தடுக்க முயன்றதாகவும், அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததால் உள்ளே அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து வந்த நகர நிர்வாகத் துறை அமைச்சர் எச்.சி.பாலகிருஷ்ணா, வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சாமி, அறநிலையத் துறை அமைச்சர் பசவந்தப்பா ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து முதல்வர் தலையிட்டு, மூவரையும் அனுமதிக்குமாறு அதிகாரியிடம் கூறினார்.
அமைச்சர்கள் தடுக்கப்பட்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சை வெடித்தது. பாஜக மூத்த தலைவர் சலவாதி நாராயணசாமி, மூவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே தடுக்கப்பட்டதாகவும், தீண்டாமையைக் கடைப்பிடித்த அதிகாரி மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
முதல்வர் சிவகுமார் இதுகுறித்துக் கூறுகையில், தாமே நேரடியாகத் தலையிட்டுச் சூழலைச் சரிசெய்ததாகவும், அமைச்சர்களைத் தடுக்கும் அளவுக்குத் தன்னிச்சையாகச் செயல்பட்டது ஏற்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்தார். வீடியோ காட்சிகளின் அடிப்படையில் எந்தெந்த அதிகாரிகள் அவ்வாறு நடந்துகொண்டனர் என்பதைக் கண்டறிந்து அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலர் ஷாலினி ரஜ்னேஷுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



















