தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
குமரிக்கடல், அதை ஒட்டிய தென் தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதே இதற்குக் காரணம். இது முன்னதாக தென்மேற்கு வங்கக்கடலில் நிலவியது.
இன்று கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை உள்ளிட்ட வேறு பல மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மழையுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
நாளை கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யலாம். 24ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களிலும், 25ஆம் தேதி நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி மாவட்டங்களிலும் இதே நிலை இருக்கும். 26ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும். 27 மற்றும் 28ஆம் தேதிகளில் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகரில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25-26 டிகிரி செல்சியஸ் இருக்கலாம்.
தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 26ஆம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




















