நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குக் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, கன்னியாகுமரியில் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாத் தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விவேகானந்தர் பாறை, திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம், கடற்கரைப் பகுதிகள் ஆகியவற்றுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் கன்னியாகுமரியில் காலை முதல் மழை பெய்யவில்லை. இதனால் காலை 9 மணி முதலே சுற்றுலாப் பயணிகள் தலங்களுக்கு வந்து செல்கின்றனர். கனமழை, வெள்ளப்பெருக்கு அபாயம் இருப்பதால் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரியில் ஏற்கெனவே மண்சரிவுகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்த சில நாட்களுக்கு அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












