ஆப்பிள் நிறுவனத்துக்கான உதிரிபாக உற்பத்தியில் தனது பங்கை அதிகரிக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஐபோன்களின் வெளிப்புற உலோகக் கட்டமைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வந்த இந்நிறுவனம், இனி கண்ணாடி உறைகள் மற்றும் மேம்பட்ட உலோக பாகங்களைத் தயாரிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது.
இந்த விரிவாக்கம் நடந்தால், ஆப்பிளின் இந்திய உற்பத்திச் சங்கிலியில் அதிக மதிப்புள்ள பாகங்களை வழங்கும் நிறுவனமாக டாடா மாறக்கூடும்.
உலகளாவிய ஐபோன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்தியாவிலிருந்து ஐபோன் ஏற்றுமதி 13.2 பில்லியன் டாலராக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாக உற்பத்தித் திட்டத்தின்கீழ் (ECMS), மொபைல் போன் வெளிப்புற உறைகள் தயாரிக்கும் மூன்று திட்டங்களுக்கு மொத்தம் ரூ.27,166 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ், மதர்சன் குழுமம், ஃபாக்ஸ்கானின் இந்தியப் பிரிவான யூசான் டெக்னாலஜி ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
துல்லியமான பாகங்களைத் தயாரிக்க மேம்பட்ட இயந்திரங்களும் தரக் கட்டுப்பாடும் அவசியம் என்றும், இறுதிக்கட்ட அசெம்பிளியைவிட இதில் கூடுதல் மதிப்பு உருவாகும் என்றும் துறை நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும், புதிய உற்பத்தித் திட்டங்கள் குறித்து நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.












