செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோக்களின் வேகமான வளர்ச்சியால் அடுத்த 20 ஆண்டுகளில் உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தை பெரும் கொந்தளிப்பைச் சந்திக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தொலைபேசி விற்பனை, வாடிக்கையாளர் சேவை, கணக்குப்பதிவு போன்ற அலுவலகப் பணிகளும், கட்டுமானம், விவசாயம் போன்ற உடல் உழைப்புப் பணிகளும் ரோபோக்களால் பெருமளவு ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ‘ரோபோவை வேலைக்கு எடு, மனிதனை நீக்கு’ என்பது நிறுவனங்களின் எதிர்கால உத்தியாக மாறக்கூடும் என்பது அவரது கருத்து.
உற்பத்திச் செலவைக் குறைத்து லாபத்தை உயர்த்துவதே நிறுவனங்களின் முன்னுரிமை என்பதால், ஓய்வின்றி 24 மணி நேரமும் துல்லியமாக உழைக்கும் ரோபோக்களை அவை தேர்வு செய்யும் என்கிறார் அவர். இதனால் நடுத்தர, ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து செல்வம் சில பெருநிறுவனங்களிடம் குவியும் என்றும் எச்சரித்துள்ளார்.
மனிதர்கள் பணியாற்றும்போது அரசுக்குக் கிடைக்கும் வருமான வரி, ரோபோக்கள் அவர்களிடத்தை எடுத்துக்கொண்டால் பெருமளவு குறையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





















