காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது வாழ்க்கை குறித்த "பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்" நூலை வெளியிடவுள்ள நிலையில், ராஜீவ் காந்தியுடனான தனது முதல் சந்திப்பை நினைவுகூரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஹார்பர்காலின்ஸ் வெளியிடும் இந்த நூல் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் இணைந்த சோனியா, நூலின் முதல் பார்வையை அப்போது பகிர்ந்தார். அன்பு, கடமை, இழப்பு, தனக்கான இடத்தைக் கண்டறிதல் ஆகியவை பற்றிய கதை இது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டு நிமிட வீடியோவில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் தான் கழித்த ஆரம்ப நாட்களை அவர் நினைவுகூர்ந்தார். அங்குள்ள வார்சிட்டி என்ற சிறிய கிரேக்க உணவகத்தில்தான் ராஜீவை முதன்முதலில் சந்தித்ததாக அவர் கூறினார். அந்த உணவகத்துக்கு ஐரோப்பிய மாணவர்களும் இந்திய மாணவர்களும் வருவது வழக்கம். ராஜீவுடன் இருக்க வேண்டும் என்று முதல் சந்திப்பிலேயே தனக்குத் தோன்றியதாகவும், அவருக்கும் அதே உணர்வு இருந்தது பின்னர் தெரிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.












