பிலிப்பைன்ஸ் விமானப்படையின் இரு பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் 4 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல், படாங்காஸ் மாகாணத்தின் லிபா நகரிலுள்ள ஃபெர்னாண்டோ விமானப்படைத் தளத்தில் வழக்கமான பயிற்சியின்போது இந்தச் சம்பவம் நடந்தது. இத்தாலியில் வாங்கப்பட்ட எஸ்எஃப்-260 ரக இலகுரகப் பயிற்சி விமானங்கள் குறைந்த உயரத்தில் நேருக்கு நேர் மோதித் தளத்துக்குள்ளேயே விழுந்து நொறுங்கின. ஒவ்வொரு விமானத்திலும் இருந்த இருவர் வீதம் நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விமானங்கள் குடியிருப்புப் பகுதிகளில் விழவில்லை; தரையிலிருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஒரு விமானம் வீரர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அருகே விழுந்ததாக நேரில் பார்த்தவர் ஒருவர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து இந்த ரக விமானங்களின் பயன்பாட்டை விமானப்படை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. எத்தனை எஸ்எஃப்-260 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன என்பதை அது வெளியிடவில்லை.












