தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
அக்டோபர் 26-ஆம் தேதி இந்தத் தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து ஆந்திரா – ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கிச் செல்லக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாகக் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் காற்று வீசலாம். சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 29-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே கடலில் உள்ளவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும் பல்வேறு மாவட்ட மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
எல் நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பைவிடக் குறைவாகப் பெய்தது. அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












