கணவருக்குத் திருமணத்தை மீறிய உறவு இருந்தது என்பதை மட்டுமே வைத்து, மனைவிக்கு அவர் கொடுமை இழைத்ததாகக் கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனைவியின் தற்கொலைக்குத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கணவரை விடுவித்த கீழமை நீதிமன்றத் தீர்ப்பையும் உறுதி செய்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த தம்பதிக்கு 2008-இல் திருமணம் நடந்தது. மனைவி தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாகவும் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும் கணவர் மீது வழக்குப் பதிவானது. குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி கீழமை நீதிமன்றம் அவரை விடுவித்தது. இதை எதிர்த்து உயிரிழந்த பெண்ணின் சகோதரர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி சுந்தர் மோகன் இந்த மேல்முறையீட்டை விசாரித்தார். ஆரம்பகட்டப் புகாரில் வரதட்சணைக் கொடுமை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், சாட்சிகள் விசாரிக்கப்பட்டபோதுதான் அந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே கீழமை நீதிமன்றம் முடிவெடுத்தது என்று கூறிய நீதிபதி, அதில் தலையிட எந்தக் காரணமும் இல்லை எனத் தீர்ப்பளித்தார்.












