வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி வருவதால் ஆந்திராவில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, அனைத்துத் துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
நீர்வளத் துறை அதிகாரிகளுடன் நேற்று மாலை நடந்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தில் அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். கடலோர ஆந்திரா, ராயலசீமா மாவட்டங்களில் பெய்யவுள்ள கனமழையைப் பயன்படுத்தி அனைத்து நீர்த்தேக்கங்களையும் பாசனக் குளங்களையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என்றும், வெள்ளம், நீர், பேரிடர் மேலாண்மையை உள்ளடக்கிய கூட்டுச் செயல்திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
போலவரம் திட்டத்தின் தரத்தில் சமரசம் கூடாது என்ற அவர், அதன் வலது, இடது பிரதான கால்வாய்களை 2027 மார்ச்சுக்குள் முடிக்க உத்தரவிட்டார். அத்திட்டத்தின் சிவில் பணிகள் 90.20 சதவீதம் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோதாவரி – பெண்ணா நதிகள் இணைப்புக்கான செயல்திட்டத்தைத் தொடங்கவும், கோதாவரி நீரைக் காவிரிக்குக் கொண்டு செல்லும் பணிகளை விரைவுபடுத்தவும் அவர் அறிவுறுத்தினார். பிரகாசம் தடுப்பணைக்கு மேலே வைகுண்டபுரத்திலும் கீழே சோடவரத்திலும் 14 டிஎம்சி நீரைச் சேமிக்கும் புதிய தடுப்பணைகளுக்கான சாத்தியத்தை ஆராயவும், 36 முன்னுரிமை நீர்ப்பாசனத் திட்டங்களை 2028 டிசம்பருக்குள் செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












