விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள கோழிப்பண்ணையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4,200 கோழிக்குஞ்சுகள் கருகி உயிரிழந்தன.
தைலாபுரம் முதன்மைச் சாலையில் சண்முகம் என்பவர் சொந்தமாகக் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அங்கு 4,200 குஞ்சுகளை அவர் வளர்த்து வந்தார். வழக்கம்போல நேற்றும் பண்ணைக்கு வந்த அவர், இரவு 11 மணியளவில் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
நள்ளிரவு சுமார் 2 மணிக்குப் பண்ணை தீப்பற்றி எரிவதைக் கண்ட பொதுமக்கள், உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக வந்து, வானூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்; அதற்குள் பண்ணையில் இருந்த குஞ்சுகள் அனைத்தும் இறந்துவிட்டன.
சண்முகம் அளித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். மின்கசிவால் தீ ஏற்பட்டதா, அல்லது யாராவது திட்டமிட்டுச் செய்தார்களா என்பது குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.




















