விராலிமலை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் சி. விஜயபாஸ்கரே போட்டியிடுவார் என்பதைப் போலப் பேசிய அமைச்சர் செங்கோட்டையனின் கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. விராலிமலையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.
விராலிமலை எம்எல்ஏவாக இருந்த விஜயபாஸ்கர், பதவியை ராஜினாமா செய்து அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். அதனால் அந்தத் தொகுதி காலியாக உள்ளது. தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விழாவில் பேசிய செங்கோட்டையன், “விஜயபாஸ்கர் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருக்கு எல்லா வித்தையும் தெரியும்” என்றார். அவர் களத்தில் நிற்பது மட்டுமல்லாமல் வெற்றியும் பெறுவார் என்றும், தலைவருக்குப் பின்னால் நின்று பணியாற்றுவார் என்றும் குறிப்பிட்டார்.
அதிமுக எம்எல்ஏக்களை தவெக விலைக்கு வாங்குவதாக ஏற்கெனவே புகார் உள்ளது. தலைமைச் செயலகத்தில் கட்சி இணைப்பு நிகழ்வு நடத்தப்படுவதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் சூழலில், அரசு விழாவில் வேட்பாளர் குறித்துப் பேசியிருப்பது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் தேதியோ, தவெகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிப்போ இதுவரை வெளியாகவில்லை.




















