பத்திரப் பதிவு மற்றும் நில அளவைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தப் பணிகளைத் தனியார்மயமாக்கும் முயற்சி நடப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நில அளவை அடிப்படையானது என்றும், அதைத் தனியாரிடம் வழங்கினால் பேராபத்து ஏற்படும் என்றும் கூறியுள்ளார். விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நடக்கும் அளவைக் குளறுபடிகள் சீர்செய்ய முடியாத சிக்கல்களை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
பத்திரப் பதிவு நடைமுறைகளில் தளர்வு இருந்த காலத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிகார அத்துமீறல்களும் தவறுகளும் நடந்ததை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களும் பணிச்சுமையும் உள்ளதைக் காரணம் காட்டி, உரிமம் பெற்ற தனியார் நில அளவையாளர்களைப் பயன்படுத்துவதும், சில சேவைகளை அவுட்சோர்சிங் முறைக்கு மாற்றுவதும் மக்கள் விரோதச் செயல் என அவர் விமர்சித்துள்ளார். காலிப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்றும், நில அளவைப் பணிகள் முழுவதும் அரசுத் துறையிலேயே இருக்கும் என்று அரசு உறுதிசெய்து அறிவிக்க வேண்டும் என்றும் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.












