பிரெட்டில் 100 சதவீதம் முழு கோதுமை பயன்படுத்தப்படுவதாகத் தவறாக விளம்பரம் செய்ததற்காக, பிரிட்டானியா நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ஆணையம் தாமாக முன்வந்து நடத்திய விசாரணையில், அந்நிறுவனத்தின் பிரெட்டில் 62 சதவீதம் மட்டுமே கோதுமை இருப்பது தெரியவந்தது. சட்டப்படி ஒரு பொருளை முழு கோதுமை பிரெட் எனக் குறிப்பிட, அதில் குறைந்தது 75 சதவீதம் கோதுமை இருக்க வேண்டும். இது குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் கருத்து கேட்கப்பட்டபோது, அந்த விளம்பரம் நுகர்வோரைத் தவறாக வழிநடத்துவதாக அது தெரிவித்தது.
முதன்மை ஆணையர் நிதி காரே, ஆணையர் அனுபம் மிஸ்ரா அடங்கிய அமர்வு, இது நுகர்வோர் உரிமையை மீறும் நேர்மையற்ற வணிக நடைமுறை எனத் தீர்ப்பளித்தது.
அபராதத்துடன், பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலிருந்தும் அந்தத் தவறான விளம்பரத்தை உடனடியாகத் திரும்பப் பெறவும் பிரிட்டானியாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோரை ஏமாற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.












