ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் செய்து, சன்னரகப் பொன்னி அரிசி என்ற பெயரில் கிலோ ரூ.30-க்கு விற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அரிசி விலை உயர்வுக்குத் தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசி கிலோ ரூ.30-க்குக் கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அங்கு விற்கப்படுவது வழக்கமாக வழங்கப்படும் இலவச அரிசியே என்று தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் புகார் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். பல இடங்களில் மக்கள் அரிசியைத் திருப்பிக் கொடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதாகக் கூறி, பொதுமக்கள் தவெக எம்எல்ஏவை முற்றுகையிட்டுக் கேள்வி எழுப்பியதாகவும், அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார். மாநிலத்தில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், வெறும் 250 இடங்களில், குடும்பத்துக்கு 5 கிலோ மட்டுமே வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தபோது, அப்போதைய முதல்வர் கருணாநிதி வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை மானிய விலையில் வழங்கியதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
சன்னரகப் பொன்னி அரிசி கொள்முதலுக்கு எப்போது டெண்டர் விடப்பட்டது, எந்த நிறுவனங்கள் டெண்டர் எடுத்தன, அவை என்ன விலைக்கு அரிசியை வழங்கின, பொதுமக்களுக்கு அரசு எவ்வளவு மானியம் அளிக்கிறது என்பதற்கு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.













