நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்புவோருக்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசு நிறுவனங்களில் புதிதாக 3,878 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவை மூன்றாம் சுற்று கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளன என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்தது.
இரண்டு சுற்றுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன. தற்போது நடக்கும் மூன்றாம் சுற்றில் மீதமுள்ள காலியிடங்களுடன் இந்தப் புதிய இடங்களும் நிரப்பப்படும். முன்பு இடம் கிடைக்காதவர்கள், குறைந்த கட்-ஆப் காரணமாகக் காத்திருப்பவர்கள் ஆகியோர் இதில் பங்கேற்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: தரவரிசைப் பட்டியலில் தகுதி பெற்றவர்கள் tnmedicalselection.net இணையதளத்தில் உள்நுழைந்து, விருப்பமான கல்லூரிகளை வரிசைப்படுத்த வேண்டும்.
பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஓடி உள்ளிட்ட படிப்புகள் இதில் அடங்கும். இதற்கிடையில், 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் பட்டப்படிப்புக்கான கூடுதல் இடங்களும், 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகளும் உருவாக்கப்படுவதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது.












