சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர் இருப்பு 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவில் 490 மில்லியன் கன அடியாகக் குறைந்துள்ளது. இதையடுத்து இணைப்புக் கால்வாய் வழியாகச் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர் பூண்டிக்கு வந்து சேரும். அந்த நீர் வரத்து கடந்த செப்டம்பரில் நிறுத்தப்பட்டதால், ஏரியின் இருப்பு படிப்படியாகக் குறைந்தது.
தற்போது பேபி கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு வினாடிக்கு 16 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி புழல் ஏரியில் 3,300 மில்லியன் கன அடியில் 2,415 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 3,645 மில்லியன் கன அடியில் 1,497 மில்லியன் கன அடியும் நீர் உள்ளது.
தற்போதைக்குச் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












