சர்க்கரை விலை கடந்த சில மாதங்களில் சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், தீபாவளி நெருங்குவதால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. வரியின்றி கச்சா சர்க்கரை இறக்குமதி செய்ய வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் அக்டோபர் 31-லிருந்து டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வுக்கான காரணங்களாக உற்பத்திக் குறைவு, பண்டிகைக்கு முந்தைய தேவை அதிகரிப்பு, கரும்புப் பயிர் சேதம், உலகளாவிய விநியோக இறுக்கம், பதுக்கல் ஆகியவற்றை அரசு சுட்டிக்காட்டுகிறது. நடப்பு ஆண்டில் 343 லட்சம் டன் எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தும், மழை போதாததால் 306 லட்சம் டன்னே உற்பத்தியானது.
ஆண்டுக்கு சுமார் 280 லட்சம் டன் சர்க்கரை நுகரப்படுகிறது. உற்பத்தி இதற்குப் போதுமானதாக இருந்தாலும், வழக்கமான கையிருப்பை விட 30 லட்சம் டன் பற்றாக்குறை நிலவுவதே சந்தையில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. பதுக்கலைத் தடுக்க, மத்திய-மாநில அதிகாரிகள் கொண்ட குழுக்கள் ஆலைகள், வியாபாரிகளிடம் உள்ள இருப்பைக் கண்காணிக்கின்றன.
கடந்த ஆகஸ்டில் 10 லட்சம் மெட்ரிக் டன் வரை வரியில்லா இறக்குமதிக்கு அனுமதி தரப்பட்டது. ஆனால் இதுவரை வந்து சேர்ந்தது 2.6 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே. வெளிநாட்டுச் சந்தை விலை சாதகமாக இல்லாததே இந்த மந்தத்துக்குக் காரணம் என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன; உலக விலை குறையும் சமயத்தில் இந்த நீட்டிப்பு உதவும் என்பதே அரசின் எண்ணம் என்றும் அவை குறிப்பிடுகின்றன.





















