மாதம் ₹25,000 வரை சம்பளம் பெறும் ஊழியர்கள் அனைவரும் தங்கள் நிறுவனம் மூலம் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) திட்டத்தில் இணைந்துள்ளனரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று இபிஎஃப்ஓ அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "உங்கள் மாதச் சம்பளம் ₹25,000 வரை உள்ளதா? இன்றே உங்கள் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்" என்று அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
பிஎஃப் கட்டாயமாகும் ஊதிய வரம்பு முன்பு அடிப்படை மாத சம்பளம் ₹15,000 ஆக இருந்தது. மத்திய அரசின் புதிய விதிகளின்படி அது ₹25,000 ஆக உயர்த்தப்பட்டு, செப்டம்பர் 17, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், இதுவரை பிஎஃப் வளையத்துக்கு வெளியே இருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் வர வாய்ப்பு உருவாகியுள்ளது.
திட்டத்தில் இணைவோருக்குப் பல பலன்கள் உண்டு. ஊழியர் செலுத்தும் 12% தொகைக்கு இணையாக நிறுவனமும் செலுத்துகிறது; அதற்கு அரசு ஆண்டுதோறும் வட்டி வழங்குகிறது. 10 ஆண்டுகள் தொடர்ந்து பங்களித்தவர்கள் 58 வயதுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் பெறலாம். மேலும், ஊழியர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், அவர் குடும்பத்துக்கு ஈடிஎல்ஐ திட்டத்தில் அதிகபட்சம் ₹7 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இதற்கு ஊழியர் தனியாக பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை.
புதிய வரம்பால் கைக்கு வரும் சம்பளம் சற்றுக் குறையலாம். இதுவரை அதிகபட்சம் ₹1,800 பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு, புதிய வரம்பில் கணக்கிட்டால் ₹3,000 வரை பிடிக்கப்படலாம். எனினும் நிறுவனமும் அதே அளவு செலுத்துவதால் அந்தத் தொகை ஊழியரின் சேமிப்பாகவே சேரும்.
ஊழியர்கள் தங்கள் சம்பளச் சீட்டில் பிஎஃப் பிடித்தம் உள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம். பிடித்தம் இல்லையெனில் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவை அணுகலாம். ஏற்கெனவே கணக்கு உள்ளவர்கள் யுஏஎன் எண்ணை ஆதாருடன் இணைத்து இ-நாமினேஷனை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.




















