ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவை சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத டெல்லி அணி, 2027 சீசனில் முதல் கோப்பையை இலக்காகக் கொண்டு பயிற்சியாளர் குழுவை வலுப்படுத்தி வருகிறது. ஏற்கெனவே சவுரவ் கங்குலி தலைமைப் பயிற்சியாளராகவும், யுவராஜ் சிங் உதவிப் பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சுப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர் சமிந்தா வாஸ் உள்ளார். இவர்களுடன் தற்போது மிஸ்ராவும் இணைந்துள்ளார்.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடர் முதல் 16 சீசன்களில் மிஸ்ரா 162 போட்டிகளில் விளையாடியுள்ளார். அப்போதைய டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் தொடங்கிய அவரது பயணத்தில், 10 சீசன்களை அந்த அணிக்காகவே ஆடியுள்ளார். அதனால் தொடக்க காலத்தில் ஆடிய அதே அணியுடன் இப்போது பயிற்சியாளராக மீண்டும் இணைந்திருக்கிறார்.
சர்வதேச போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 285 விக்கெட்டுகளையும், முதல்தரப் போட்டிகளில் 535 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். அவரது அனுபவம் அணியின் சுழற்பந்து வீச்சுக்குப் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















