ஆவடி அருகே பெண் வேடமிட்டு வீட்டுக்குள் புகுந்து, மூதாட்டியின் கழுத்தில் கத்தி வைத்து நகை பறித்த நபரை, சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மோரை, அண்ணா நகரைச் சேர்ந்த ஜெயபால் (63), மகன் வெற்றிவேலுடன் சேர்ந்து அதே பகுதியில் காய்கறிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 18-ஆம் தேதி இரவு அவரது மனைவி செந்தூர்கனி (60) வீட்டில் தனியாக இருந்தபோது, சுடிதார் அணிந்த ஒருவர் உள்ளே நுழைந்தார். கத்தியைக் காட்டி மிரட்டி, செந்தூர்கனியின் கழுத்திலிருந்த 5 சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். மிரட்டலின்போது கழுத்தில் காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
விசாரணையில் ஈடுபட்ட ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார், அதே பகுதியைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் வெங்கடேஷ் ராஜாவை (35) கைது செய்து, நகையை மீட்டனர். கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, செந்தூர்கனி தனியாக இருப்பதை நீண்ட நாள்களாகக் கண்காணித்து இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
அவர் தெருவில் நடந்து நோட்டமிடுவதும், பின்னர் சுடிதாரில் வந்து இரண்டே நிமிடத்தில் சங்கிலியைப் பறித்துத் திரும்புவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகளே குற்றவாளியை அடையாளம் காண உதவின.




















