பிரான்ஸில் நிலவும் பதற்றமான சூழலையும், பல பகுதிகளில் அமலில் உள்ள ஊரடங்கையும் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸுக்குப் பயணம் செய்பவர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் பொருந்தும்.
அந்நாட்டில் கடந்த 17-ஆம் தேதி நடந்த போராட்டங்களின்போது வன்முறை வெடித்தது. பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும், பல கடைகளில் பொருட்கள் சூறையாடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பாரிஸின் சில பகுதிகள், லில், லியோன், நீஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. மார்சேய் நகரில் மக்கள் கூடுவதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.
பள்ளிகளுக்குப் போதிய நிதி இல்லாதது, மாணவர் நெரிசல் ஆகியவற்றுக்கு எதிராகக் கடந்த செப்டம்பர் இறுதியில் தொடங்கிய போராட்டம், பின்னர் விலைவாசி உயர்வு, பொதுச் சேவைக் குறைபாடுகளுக்கு எதிரானதாகவும் விரிவடைந்தது.
இந்நிலையில், பிரான்ஸின் முதன்மை மாணவர் சங்கமும் மஞ்சள் சீருடை இயக்கமும் வரும் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) பேரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன. வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதியளித்துள்ளார். மார்சேயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை +33 7 43 16 25 59 என்ற எண்ணிலோ cgo.marseille@mea.gov.in என்ற மின்னஞ்சலிலோ தொடர்புகொள்ளலாம்.




















