புதுச்சேரியில் மழை நிவாரணப் பணிகளுக்கு அமைச்சர்களே தலைமை ஏற்று நேரடியாக முகாமிட்டுப் பணியாற்ற உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியிடம் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மனு அளித்துள்ளார்.
புதிய காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரம் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். உள்ளாட்சி, பொதுப்பணி, வருவாய், சுகாதாரம், மின்துறை, வனத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் நிவாரணப் பணிகளில் தேக்கம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மழைக்குப் பிறகு காய்ச்சல், தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கச் சுகாதாரத் துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்; சுகாதாரமான குடிநீர் வழங்கலை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில், உள்துறை, வருவாய், உள்ளாட்சி, பொதுப்பணி, மின்துறை செயலர்களை உள்ளடக்கிய சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அனைத்துத் துறை உயரதிகாரிகளையும் அழைத்துக் கூட்டம் நடத்தி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


















