அமலாக்கத்துறை தனது சட்டரீதியான அதிகார எல்லையைத் தாண்டிச் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இன்று எச்சரித்துள்ளது. கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தொடர்புடைய வழக்கு விசாரணையின்போது இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.
கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் நிறுவனம் (சிஎம்ஆர்எல்), பினராயி விஜயனின் மகள் வீணாவுடன் தொடர்புடைய எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு 2017 முதல் 2020 வரை ரூ.1.72 கோடி வழங்கியதாகவும், அதற்கு எந்தச் சேவையும் அளிக்கப்படவில்லை என்றும் அமலாக்கத்துறை கூறுகிறது. விசாரணைக்குப் பிறகு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66(2)-ன் கீழ் அந்தத் தகவல்களைக் கேரள காவல்துறைக்கு அது அனுப்பியது.
இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தனி நீதிபதி எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்ய பினராயி தரப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பினராயி, வீணா, முகமது ரியாஸ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.
நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி. மோகனா அமர்வு விசாரித்தது. பிரிவு 66(2)-ன் கீழ் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்வது கட்டாயமா என்பதே முதன்மைக் கேள்வி என்று நீதிபதி பாக்சி கூறினார். தனி நீதிபதியின் உத்தரவில் ஓரிடத்தில் கட்டாயம் என்றும், மற்றோரிடத்தில் ஓரளவு சரிபார்ப்பு தேவை என்றும் உள்ள முரணையும் சுட்டிக்காட்டினார். பினராயி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆஜரானார்.


















