கருவேப்பிலங்குறிச்சி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரத் தடுப்புக் கட்டையில் மோதியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டியதே காரணம் என்று கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் தொழுதூரிலிருந்து விருத்தாசலத்துக்கு இன்று காலை சென்ற இந்தப் பேருந்தில் 50-க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். வழியில் ஓட்டுநருக்கு அழைப்பு வந்ததாகவும், அவர் ஓட்டிக்கொண்டே பேசியதால் கவனம் தவறி விபத்து நேர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் லட்சுமி (40), கவிதா (45), ஆசிகா (18), சந்தியா (40), அகல்யா (23), விக்டோரியா (36), அன்புராஜன் (33), செல்வராஜ் (52), செல்வகுமார் (19) ஆகியோர் அடங்குவர். சுற்றியிருந்தவர்கள் உடனே அவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து நடந்த உடனே ஓட்டுநர் இறங்கி ஓடி மறைந்துவிட்டதாகக் காவல்துறை கூறுகிறது. அவரைத் தேடும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தால் ஒரு மணி நேரம் அந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. போலீசார் பேருந்தை அகற்றி, புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.


















