சீனாவின் பூஜியான் மாகாணம் ஜாங்பிங் நகரில், அடுக்குமாடிக் குடியிருப்பின் 12-வது மாடி ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை சிக்கி வெளியே தொங்கிய 3 வயது சிறுமி, அண்டை வீட்டாரின் விரைவான செயலால் காயமின்றி மீட்கப்பட்டார்.
சிறுமியின் தந்தை 16-ஆம் தேதி இரவுப் பணிக்குச் சென்றிருந்தார். மறுநாள் சனிக்கிழமை அதிகாலை, மகள் உறங்கிக்கொண்டிருந்ததால் தாய் மளிகைப் பொருட்கள் வாங்க வெளியே சென்றார். இடையில் கண்விழித்த சிறுமி, வீட்டில் யாரும் இல்லாததால் ஜன்னல் வழியாக வெளியேற முயன்றபோது, பாதுகாப்பு கிரில் கம்பிகளுக்குள் தலை மாட்டிக்கொண்டது. உடல் முழுவதும் கட்டடத்துக்கு வெளியே அந்தரத்தில் தொங்கியது.
அழுகுரல் கேட்டு அண்டை வீட்டாரும் பாதுகாப்புக் காவலர்களும் விரைந்தனர். 11-வது மாடியில் வசிப்பவர்கள் தங்கள் ஜன்னல் வழியாக வெளியே சாய்ந்து, சிறுமியின் கால்களுக்குக் கீழே ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை வைத்துத் தாங்கிப் பிடித்தனர். இதனால் சிறுமியின் எடை தாங்கப்பட்டு, அவர் கீழே விழாமல் தடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று, கம்பிகளுக்குள் சிக்கியிருந்த சிறுமியைப் பத்திரமாக விடுவித்தனர்.
இந்த மீட்புக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அண்டை வீட்டாரின் சமயோசிதச் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.




















