பெங்களூருவில் நடைபெறவுள்ள தனது இசைக் கச்சேரிக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பின்னணிப் பாடகர் சோனு நிகம் கன்னட மக்களிடம் வீடியோ மூலம் மன்னிப்பு கோரியுள்ளார். இதையடுத்து, கச்சேரிக்கு எதிரான போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
‘தி ரெவல்யூஷன் இந்தியா டூர்’ என்ற பெயரில் சோனு நிகம் மேற்கொள்ளவுள்ள இசைச் சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சி அக்டோபர் 24 அன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், அனுமதி அளித்தால் போராட்டம் நடத்தப்படும் என்றும் கர்நாடக ரக்ஷண வேதிகே தலைவர் டி.ஏ. நாராயண கௌடா பெங்களூரு காவல்துறையிடம் மனு அளித்திருந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில், கன்னடப் பாடல் பாடுமாறு ஒரு பார்வையாளர் தொடர்ந்து வற்புறுத்தியபோது, சோனு நிகம் அதைப் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புபடுத்திப் பேசியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம். அக்கருத்து அப்போதே கர்நாடகாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது வெளியிட்ட வீடியோவில், நாராயண கௌடாவுடன் தான் பேசியதாகவும், அந்த உரையாடல் அன்பும் மரியாதையும் நிறைந்ததாக இருந்ததாகவும் சோனு நிகம் தெரிவித்தார். “நான் அறியாமல் ஏதேனும் பேசி உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால், மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறிய அவர், கடந்த 30 ஆண்டுகளாகக் கன்னட மக்கள் தனக்கு அன்பு காட்டி வருவதையும் நினைவுகூர்ந்தார்.
இதற்குப் பதிலளித்த நாராயண கௌடா, சோனு நிகமின் பாடல்கள் தங்கள் அமைப்பினருக்கு எப்போதும் பிடிக்கும் என்றும், அவர் மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, போராட்ட அறிவிப்பைக் கைவிட்டார்.
இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ள சோனு நிகம், தமிழில் ‘வாராயோ தோழி’ (ஜீன்ஸ்), ‘விழியில் உன் விழியில்’ (கிரீடம்) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
























