சென்னையில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை இடைவிடாது பெய்த கனமழையில், நகரின் 9 இடங்களில் 10 செ.மீ.க்கும் கூடுதலாக மழை அளவு பதிவாகியுள்ளது. இவற்றில் எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் பதிவான 15.14 செ.மீ. மழையே அதிகபட்சம்.
வடகிழக்குப் பருவமழை வலுப்பெற்றுள்ள சூழலில், அக்டோபர் 20 இரவு நகரின் பல பகுதிகளில் தொடங்கிய மழை அக்டோபர் 21 காலை வரை நீடித்தது. தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை இணையதளத்தில், இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர மழை அளவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆர். நகருக்கு அடுத்தபடியாக சைதாப்பேட்டை (12.96 செ.மீ.), ஆலந்தூர் (12.89 செ.மீ.), டிஜிபி அலுவலகப் பகுதி (12 செ.மீ.) ஆகியவை உள்ளன. மடிப்பாக்கம் 11.94, மதுரவாயல் 11.58, வளசரவாக்கம் 11.5, நெற்குன்றம் 11.32, நுங்கம்பாக்கம் 11.22 செ.மீ. என மீதமுள்ள ஐந்து இடங்களிலும் 10 செ.மீ.யைத் தாண்டி மழை பெய்தது.
கொரட்டூர் (9.88), சாலிகிராமம் (9.46), அம்பத்தூர் (9.3), பாரிமுனை (8.76), அண்ணா பல்கலைக்கழகம் (8.65), மணலி (8.62), அண்ணா நகர் மேற்கு (8.52) உள்ளிட்ட பகுதிகளில் 8 முதல் 10 செ.மீ. வரை மழை பதிவானது. பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், புழல், கொளத்தூர், பெருங்குடி போன்ற இடங்களில் 5 முதல் 8 செ.மீ. வரை மழை அளவிடப்பட்டது.
வடசென்னையின் எண்ணூர் (3.84), தண்டையார்பேட்டை (3.08), விம்கோ நகர் (2.7) ஆகிய பகுதிகளில் மழை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. வேளச்சேரியில் 0.84 செ.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது.





















