ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட புகாரில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறனை விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அவரைக் கைது செய்தது சட்டவிரோதம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கைதுக்கான காரணம் சுகுமாறனுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று நீதித்துறை நடுவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டார். அதே நேரத்தில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்துத் தனியே விசாரணை நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.
வழக்கின் பின்னணி: தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் பங்குதாரர்களிடையே உரிமைப் பிரச்சினை இருந்தது. இதில் போலீசார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சரவணன் டிஜிபியிடம் புகார் அளித்தார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணையின்போது ரூ.5 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி சுகுமாறன் வீட்டில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்த சிபிசிஐடி, நெஞ்சுவலி காரணமாக அவரை மருத்துவமனையில் சேர்த்தது. 10-ம் தேதி அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு, டிஐஜி ஜியாவுல்ஹக்கால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். 16-ம் தேதி திருவையாறு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய, அவர் தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதித்திருந்தது. லஞ்ச வழக்கை சிபிசிஐடி தொடர்ந்து விசாரித்து வருகிறது.























