ராணுவ ரகசியங்களை வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப் பகிர்ந்ததாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய உளவுத்துறையினர் இவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கீழ்வல்லத்தைச் சேர்ந்த பாபு (52), ராணுவத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றிக் கேப்டனாக 2022-ல் ஓய்வு பெற்றவர். தற்போது சென்னையிலுள்ள கல்லூரிகளில் என்சிசி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார். சில மாதங்களாக அவர் ராணுவ ரகசியங்களைச் சேகரித்து ஒருவருக்கு அனுப்பி வருவதாக மத்திய உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து விசாரணை தொடங்கியது.
விசாரணையில், சமூக வலைதளம் வழியாக வெளிநாட்டு இளம்பெண் ஒருவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. ராணுவம் பயன்படுத்தும் ஆயுத தளவாடங்கள் மற்றும் அவற்றின் துல்லியத் தாக்குதல் திறன் குறித்த விவரங்களை அந்தப் பெண் கேட்டதாகவும், பாபு அவற்றைச் சேகரித்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
அந்தப் பெண் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறித்து உளவுத்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


























