மும்பையில் சைக்கிளிலேயே டெலிவரி செய்து வந்த பிளிங்கிட் ஊழியர் ஒருவருக்கு, தொழிலதிபர் ஆனந்த் அம்பானி சார்பில் எனக் கூறி மின்சார ஸ்கூட்டர் பரிசளிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சமூக வலைதளப் பிரபலம் ஹுசைன் மன்சூரி இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். டெலிவரிக்குச் சென்றுகொண்டிருந்த சுஜீத்தை வழிமறித்த அவர், ஏன் இன்னும் மோட்டார் சைக்கிள் வாங்கவில்லை எனக் கேட்கிறார். இவ்வளவு குறைந்த வருமானத்தில் அது சாத்தியமில்லை என சுஜீத் பதிலளிக்கிறார்.
டெலிவரியை முடித்துத் திரும்பிய சுஜீத்தின் கண்களைக் கட்டி அழைத்துச் சென்ற மன்சூரி, இது ஆனந்த் அம்பானியின் சிறிய பரிசு எனக் கூறி புதிய ஸ்கூட்டரைக் காட்டுகிறார். உணர்ச்சிவசப்பட்ட சுஜீத், அவரைக் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீருடன் நன்றி தெரிவிக்கிறார்.
ஆனந்த் அம்பானியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆனந்த் சேவா அறக்கட்டளை சமூக வலைதளப் பிரபலங்கள் ரஹூல் கனல், ஹுசைன் மன்சூரி ஆகியோருடன் இணைந்து, மும்பையை இயங்க வைக்கும் உழைப்பாளிகளுக்கு மின்சார ஸ்கூட்டர்களை வழங்கி வருகிறது.


























