கோவை மாநகரில் நேற்று பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
கோவையில் ஒரு வாரமாக வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டத்துக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பகலில் இடியுடன் கூடிய மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் ஓடியது.
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் அருகிலுள்ள தெருக்களில் மழைநீரும் சாக்கடை நீரும் கலந்து ஆறுபோல் ஓடியது. காமராஜர் சாலையில் இஎஸ்ஐ மருத்துவமனை முன்பும் இதே நிலை காணப்பட்டது. சவுரிபாளையம் பிரிவு, வின்சென்ட் சாலை ஹவுசிங் யூனிட், சுங்கம் ரெட்பீல்ட் பகுதி, புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதி ஆகிய இடங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
பகல் 3 மணிக்கே இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் ஒதுங்க இடமின்றித் தவித்தனர். பருவமழையை ஒட்டி மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், மழையின் அளவுக்கு அவை போதுமானதாக இல்லாததால் பல இடங்களில் நீர் தேங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























